செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

இடதுசாரிகளே நம்பகமான மாற்று...!

     
              மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர், தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் கட்சியின் 21-ஆவது மாநில மாநாட்டில் ஆற்றிய உரை :-                            
       
              உலக அளவில் 6 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் எத்தகைய உத்திகளைக் கையாண்டன என்பதைப் பார்த்தோம்.

இடதுசாரிகளே நம்பகமான மாற்று!                             

           ஐரோப்பாவின் கிரீஸ் நாட்டில் இடதுசாரி சக்திகள் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. நெருக்கடியின் மையமாகவே இருந்த அந்த நாட்டில் நிகழ்ந்துள்ள இந்த மாற்றம், இடதுசாரிகள்தான் நம்பகமான மாற்று என்ற செய்தியை உலகத்திற்குச் சொல்கிறது.

          லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க சவால்களைச் சந்தித்து இடதுசாரிகள் முன்னேறுகிறார்கள். இவ்வாறு நெருக்கடிகள் அதிகரிக்க அதிகரிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் அரசியல், பொருளாதாரம் இரண்டு தளங்களிலும் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது. ஆசியாவில் தனது முனைப்பைக் காட்டுகிற அமெரிக்கா, அதற்குத் தடையாக இருப்பது சீனா தான் என்று நினைக்கிறது. சீனாவுக்கு எதிராக இந்தியாவை தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுகிறது.

             ஒபாமா-மோடி உடன்பாடுகளில் முக்கியமான ஒன்று, ஆசிய பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முயற்சிகளில் இந்தியா ஒரு கூட்டாளியாக இருக்கும் என்பது.

மோடி அரசின் குணாம்சம்                    

               காப்பீட்டுத் துறையில் 49 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதிக்கும் சட்டத்திருத்தம், நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்கு விடுவதற்கான அவசரச் சட்டம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தி ஒப்படைப்பதற்கான அவசரச் சட்டம் ஆகிய மூன்று அவசரச்சட்டங்கள் உள்பட கார்ப்பரேட்டுகளுக்குத் தொண்டூழியம் செய்வதே தன் கடமையாக, மோடி அரசு நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து இதுவரையில் 9 அவசரச் சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. இவ்வாறு நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து அவசரச் சட்டம் கொண்டுவருவது மோடி அரசின் சர்வாதிகார குணாம்சத்தைக் காட்டுகிறது.

               கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு வெட்டு, சுகாதாரம் உள்ளிட்ட சமூகத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு வெட்டப்படுகிறது. விவசாயிகளைக் கைவிடும் வகையில் இந்திய உணவுக் கழகத்தை மூடுவதற்கான திட்டம், மக்களைக் கைவிடுகிற வகையில் பொதுவிநியோக முறை ஒழிப்பு ஆகிய நடவடிக்கைகள் அரங்கேறுகின்றன. எளியோரைக் கைவிட்டு நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் அள்ளித் தருகின்றன. அவர்களுக்கு சேவை செய்வதற்காகவே, தொழிலாளர்களை நினைத்தால் வேலைக்குச் சேர்க்கலாம், நினைத்தால் வெளியேற்றலாம் என்று தொழிலாளர் சட்டங்களிலும் கை வைத்து முதலாளிகளுக்கு சேவை செய்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ் நாட்டாமை                        

             மோடி அரசு, ஆர்எஸ்எஸ் தலைமை இரண்டுக்கும் இடையே ஒரு ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அமைப்பில் ஆர்எஸ்எஸ் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரசின் அனைத்து அமைப்புகளிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

            தாய் மதம் திரும்புதல், பசுவதை தடைச் சட்டம், சமஸ்கிருதப் பாடம் உள்ளிட்ட இந்துத்துவ சித்தாந்தத் திணிப்பு, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் என்று சங் பரிவார கூட்டத்தின் தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

               ஆகவே, கார்ப்பரேட் சுரண்டல் சக்திகள், சங் பரிவார இந்து மதவெறி கோட்பாடு ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயம் உழைக்கும் வர்க்கத்தின் முன்னால் உள்ளது.

                நிலக்கரிச் சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து தொழிலாளர்கள் ஒன்றுபட்ட மாபெரும் வேலைநிறுத்தத்தை நடத்துகிறார்கள். மோடி அரசின் தேச விரோத நடவடிக்கைகளை எதிர்த்து பல்வேறு அமைப்புகளுடன் தொழிலாளர்களும் களம் இறங்கியுள்ளனர். கார்ப்பரேட் ஆதிக்கம், மதவெறி அரசியல் இரண்டிற்கும் எதிராக ஒரு விரிவான ஒற்றுமை நாட்டில் கட்டப்பட்டாக வேண்டும்.

தமிழகத்தில் ஒரு மாற்று                       

             திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று கூறும் அஇஅதிமுக, திமுக இரண்டுமே தமிழக மக்களைக் கைவிட்டுவிட்டன. இரண்டுமே பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டுள்ளன. மத்திய ஆட்சியில் காங்கிரஸ், பாஜக என யார் வந்தாலும் அவர்களுடைய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை இவ்விரு கட்சிகளும் ஆதரித்து வந்துள்ளன.

              தங்களுடைய சுயநலனுக்காக காங்கிரஸ், பாஜக இரண்டோடும் கூட்டுச் சேரவும் இவ்விரு கட்சிகளும் தயங்கியதில்லை.

                 ஆகவே ஒரு புதிய மாற்று தேவைப்படுகிறது. தமிழக மக்கள் முன் அரசியல் மாற்றை முன்வைக்கிற கடமையை நிறைவேற்றுவோம். மாநாடு இது குறித்து விவாதிக்கும்.

                  தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினரின் போராட்டங்களுக்கும் துணை நிற்போம். தீண்டாமை எதிர்ப்பு, சாதியப்பாகுபாடுகள் எதிர்ப்பு ஆகியவற்றை இரண்டு திராவிடக் கட்சிகளும் கைவிட்டு விட்டாலும் நாம் உறுதியாக நின்று போராடுவோம்.

                அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுவாக கட்டுகிற கடமை நம்முன் உள்ளது. வலுவான இடதுசாரி இயக்கத்தையும், இடதுசாரி-ஜனநாயக மாற்றையும் வலுவாக முன்வைப்பதன் மூலமே தமிழகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
 
ஆங்கில உரையின் தமிழாக்கம் :             
தோழர் உ.வாசுகி           
மத்தியக் குழு உறுப்பினர், சிபிஐ(எம்)      
           
நன்றி : தீக்கதிர்                

கருத்துகள் இல்லை: