ஞாயிறு, 24 மே, 2015

108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை தமிழக அரசு உயர்த்தவேண்டும்...!


              புதுச்சேரி தோழர்கள் நாங்கள் நான்கு பேர் சென்ற வாரம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூன்று நாள் மாநில மாநாட்டில் பிரதிநிதியாக  பங்கேற்க விருதுநகர் சென்றிருந்தோம். புதுச்சேரி தோழர் ஒருவரின் கார் சென்ற சனிகிழமை விடியல் காலை அவரே ஓட்டிவர நாங்கள் மாநாட்டு அரங்கை சென்றடைந்தோம். சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என மூன்று நாட்கள் மாநாட்டிலேயே கரைந்துபோனோம். இறுதி நாள் திங்களன்று இரவு விருதுநகரிலிருந்து புதுச்சேரி சென்றடைய இரவு முழுதும் பயணம் செய்யவேண்டியிருக்கும் என்பதால், நாங்கள் மாலையில் நடைபெற்ற பேரணியை முடித்துக்கொண்டு, பொதுக்கூட்டம் ஆரம்பித்தவுடன் இரவு ஏழு மணிக்கே காரில் ஊருக்கு கிளம்பிவிட்டோம். 
                கார் ஓட்டும் தோழருக்கு தூக்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் பேசிக்கொண்டே வந்தோம். வழியில் திருச்சியை கடந்து ஓரிடத்தில் இரவு உணவு அருந்தினோம். அதன் பிறகு நல்லிரவை நெருங்குவதால் நிதானத்துடனும், விழிப்புடனும் பொறுமையாக வந்துகொண்டிருந்தோம். அப்போது திருச்சி - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் வேப்பூருக்கு அருகில் இறைஞ்சி என்ற கிராமத்தில், எங்களுக்கு முன் சிறிது தூரத்தில் சென்றுகொண்டிருந்த மாருதி ஆம்னி கார் ஒன்று முன்னே சென்றுகொண்டிருந்த அளவுக்கு அதிகமாக பஞ்சு மூட்டைகளை அடுக்கிக்கொண்டு சென்ற மினிலாரி மீது பலமாக மோதி இடது பக்கத்திலிருந்த பள்ளத்தில் இருந்த புதரில்  இறங்கிவிட்டது.  உள்ளே இருப்பவர்களோ  வெளியே வரமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்னே  இரண்டு கார்களில் சென்றவர்கள் கார்களை நிறுத்திவிட்டு அவர்களை நோக்கி ஓட, நாங்களும் காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடினோம். 
            அதற்குள் காரிலிருந்து  தலையிலும், முகத்திலும் அடிப்பட்டு இரத்தம் வழிய வழிய ஒவ்வொருவராக சாலையோரத்திற்கு வந்தார்கள். இரத்தவெள்ளத்தில் மயக்கநிலையில் இருந்த ஒரு பெண்மணியை இரண்டுபேர் தூக்கிக்கொண்டு வந்து சாலையில் போட்டார்கள். குழந்தை, பெரியவர் என நான்கு, ஐந்து பேர்களுக்கு தலையில் அடிப்பட்டு இரத்தம் வழிய நின்றிருந்தார்கள். அந்த காரை ஓட்டிவந்த ஓட்டுனர் கார் நசுங்கி வெளியே வரமுடியாமல் உள்ளேயே தவித்துக்கொண்டிருந்தார். 
                  இதெல்லாம் நடந்து கொண்டிருந்த போதே அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவேண்டும் என்பதற்காக நான் 108 ஆம்புலன்ஸை அழைப்பதற்காக 108-க்கு மிகுந்த பதற்றத்துடன் செல்லிடபேசியின் மூலம் போன் செய்தால் அதை எடுப்பதற்கே நீண்டநேரம் ஆனது. இந்த இடத்தில் விபத்து ஏற்பட்டிருக்கிறது உடனடியாக ஆம்புலன்ஸை அனுப்பிவையுங்கள் என்று சொன்னால், அந்த பக்கத்திலிருந்து விபத்து நடந்த இடம் எந்த ஊரு, எந்த மாவட்டம், எந்த தாலுக்கா என ஒவ்வொரு கேள்வியாக நிதானமாக கேட்கிறார்கள். என்னாங்க கேட்கிறீங்க...? நாங்க விபத்தை பார்த்துவிட்டு உங்களை அழைக்கிறோம். எந்த ஊரு என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. மாவட்டம், தாலுக்கா என்று கேட்டால் எப்படி தெரியும் என்று கேட்டாலும் மீண்டும் மீண்டும் அதையே தான் கேட்கிறார்கள். அதற்குள் அந்த ஊரிலிருந்த சிலபேர் கூடிவிட்டார்கள். அப்போது தான் எங்களுக்கே தெரிந்தது. அந்த ஊர் வேப்பூருக்கு பக்கத்தில் உள்ள இறைஞ்சி என்பதும், உளுந்தூர்பேட்டையிலிருந்து பதினாறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்றும் சொன்னாலும் அவர்கள் பதட்டமே இல்லாமல் கொஞ்சம் இருங்க என்று சொல்லிவிட்டு பேசாமல் அமைதியாகவே இருந்தார்கள். பிறகு தொலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டு மீண்டும் கூப்பிட்டேன். மறுபடியும் முதலிலிருந்து எந்த ஊரு, எந்த தாலுக்கா, எந்த மாவட்டம் என்று கேட்டார்கள். இப்ப தானே சொன்னேன் அதே இடந்தாங்க... சீக்கிரமா ஆம்புலன்சை அனுப்பி வையுங்க என்று நான் சொன்னதும், அவர்கள் ''ஆம்புலன்ஸ் இப்போ ஒன்னு கூட இல்லைங்க... எல்லாம் பிஸியா இருக்கு... கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க''  என்று பொறுப்பில்லாமல் பதில் சொன்னார்கள். அதற்குள் வந்திருந்த எங்கள் தோழர், தேசிய நெடுஞ்சாலை துறையின் அவசர உதவி எண்ணை வழியில் பார்த்தேன். அதற்கு போட்டுப்பாருங்கள் என்று சொன்னார். அந்த எண்ணை போட்டு அழைத்து வைப்பதற்குள் அங்கே வேகமாக வந்து சேர்ந்தது.
           அவசர உதவிக்கு 108 - ஐ அழையுங்கள் என்று விளம்பரம் செய்திருக்கிறார்களே தவிர அவசர உதவி என்பதற்கே பொருள் இல்லாமல் செய்துவிடுகிறார்கள். இப்போதெல்லாம் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்தின் எண்ணிக்கை என்பது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல்  மாநில அரசு ஆம்புலன்ஸ் வாகனத்தின் எண்ணிக்கையை உயர்த்தாமல் இருப்பது நியாயம் தானா...? இனியாவது தமிழக அரசு இதை கவனிக்கவேண்டும். விபத்தில் சிக்கும் பொதுமக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு போதுமான எண்ணிக்கையில்  ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கி இயங்கச்செய்யுங்கள்.  

கருத்துகள் இல்லை: