வெள்ளி, 15 மே, 2015

ஓட்டுகளை கவர மோடியின் புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள்..!

                 
        ஒரு வாரகாலமாக நீங்கள் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் வங்கிகளிலிருந்து மத்திய அரசின் குறைந்த பிரிமியத்தை கொண்ட  புதிய இன்சூரன்ஸ் திட்டங்கள் பற்றி உங்கள் கைபேசியில் குறுஞ்செய்தியாக வந்துகொண்டேயிருக்கிறது பார்த்தீர்களா...? மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டில் செய்யப்பட்ட அறிவிப்பு தான் தற்போது நடைமுறைக்கு வந்திருக்கிறது. ஓட்டுகளை குறிவைத்து நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமிது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். மோடியின் அரசியல் வித்தைகளில் இதுவும் ஒன்று. 
             என்றாலும் நான் பணிபுரியும் நிறுவனம் சம்பந்தப்பட்ட திட்டம் என்பதற்காக மட்டுமல்லாமல், இத்திட்டம் அனைத்து பயனாளிகளையும் சென்று அடையவேண்டும் என்ற அடிப்படையில் இதை எழுதுகிறேன். 
                   பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்கிற விபத்துக்கான இன்ஷூரன்ஸ் திட்டமும்,  பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்கிற ஆயுள் காப்பீட்டு திட்டமும்  நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளிலும் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. 
     #  பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) என்ற இத்திட்டத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.12/-ம்,  பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) என்ற இத்திட்டத்திற்கு ஆண்டொன்றுக்கு ரூ.330/-ம் அவரவர் வங்கிக் கணக்கிலிருந்து கழித்துக்கொள்ளப்படும். 
                # 18 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு மேற்கண்ட இரண்டு திட்டங்களும் பொருந்தும். அவர்களின் கணக்கிலிருந்து மொத்தமாக ரூ.342/- கழித்துக்கொள்ளப்படும். 
                 # 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதலாவது திட்டம் மட்டுமே பொருந்தும். அதற்காக ரூ.12/- மட்டுமே கழித்துக்கொள்ளப்படும். 
              # இதற்கான விண்ணப்பத்தை உங்கள் அருகில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்திலோ அல்லது நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலோ பெற்றுக்கொள்ளலாம். இரண்டு திட்டங்களுக்கும் தனித்தனியே விண்ணப்பங்கள் உள்ளன. விண்ணப்பங்களுக்கு ''கண்டிப்பாக'' கட்டணமில்லை.  
              # இத்திட்டங்களில் 2015-ஆம் ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதிக்குள் சேரவேண்டும். அதன் பிறகு ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 க்குள் இத்திட்டங்களில் சேர விரும்பினால் தங்கள் உடல்நலம் சம்பந்தமான ஹெல்த் டிக்ளரேஷன் கொடுத்து தான் சேரவேண்டும். இக்காலங்களை தவறவிட்டால் பின் எப்போதும் சேரமுடியாது. 
                #  இத்திட்டங்களில் சேருவதற்கு சேமிப்பு வங்கி (SB) கணக்கு வைத்திருக்கவேண்டும். இதைத்தவிர வேறு கணக்குகளை வைத்திருப்போர் இத்திட்டங்களில் சேரமுடியாது. அதேப்போல் எத்தனை வங்கிகளில் செமிப்புவங்கிக் கணக்கு இருந்தாலும், ஏதாவது ஒரு வங்கி கணக்கை  வைத்து மட்டுமே இத்திட்டங்களில் சேரவேண்டும். 
             #  ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்திற்கு முன்னரே ஆட்டோ டெபிட் மூலம் இத்திட்டங்களுக்கான பிரிமியங்கள் பிடித்தம் செய்துகொள்ளப்படும். 
               # ஒவ்வொரு முறையும் வங்கி பிடித்தம்  செய்த பிரிமியத்திற்கான ரசீதை வழங்கும். அந்த ரசீது தான் இந்த திட்டத்தில் சேர்ந்ததற்கான சான்று ஆகும். எனவே பத்திரமாக வைத்திருக்கவேண்டும். 
             # இவ்விரு திட்டங்களும் ஜூன் 1 முதல் மே 31 வரையிலான காலத்திற்குட்பட்டது. இந்த காலத்தில் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY) திட்டம் வைத்திருப்பவர்களுக்கு இயற்கை மரணம் என்றால் ரூ.2 இலட்சம் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்படும். அதேபோல் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா (PMSBY) திட்டத்தை வைத்திருப்பவர்களுக்கு விபத்தினால் மரணம் ஏற்பட்டால் மட்டுமே ரூ.2 இலட்சம் அவரது வாரிசுதாரருக்கு அளிக்கப்படும். இந்த இரண்டு திட்டங்களையும் வைத்திருப்பவர்களுக்கு விபத்தினால் மரணம் ஏற்பட்டால் 2 இலட்சம் + 2 இலட்சம் = ரூ 4 இலட்சம் கிடைக்கும். 

நீங்கள் செய்யவேண்டியது :
(1) உங்கள் வங்கியிலோ அல்லது அருகிலுள்ள எல்.ஐ.சி அலுவலகங்களிலோ இத்திட்டங்களுக்கான தனித்தனி விண்ணப்பங்களை பெற்று வருகிற மே 31-ஆம் தேதிக்குள் வங்கியில் சேர்ப்பிக்கவேண்டும்.  தவறினால் ஆகஸ்ட் 31-க்குள் கொடுக்கவேண்டும். அதன் பிறகு திட்டங்களில் சேரமுடியாது.  

(2)  ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இத்திட்டங்களுக்கான பிரிமியம் பிரிக்கப்படுகிறதா என்பதை பார்த்துக்கொள்ளவேண்டும். பிடித்தம் செய்யப்படவில்லை என்றால் இத்திட்டங்களிலிருந்து வெளியேற்றப்படுவீர். பின் எப்போதும் சேரமுடியாது.

(3)  இத்திட்டங்களைப் பற்றி அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடமும், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமும் அவசியம் தெரியப்படுத்தி இத்திட்டங்களில் சேரும்படி அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.  

கருத்துகள் இல்லை: