வெள்ளி, 23 அக்டோபர், 2015

செக்கிற்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத மத்திய அமைச்சர்....!



                   ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத்தில் தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  வீட்டுக்கு உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் மூன்று வயது மற்றும் பதினொன்றே மாதங்களான இரு தலித் குழந்தைகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சாதியைப் பற்றியோ அல்லது தீண்டாமையை பற்றியோ அறியாத பருவத்தில்  ''சாதிய தீ''  அந்த பச்சிளங்குழந்தைகளை கொன்றதை பார்த்த இந்த தேசமே கொதித்துப் போயிருக்கிறது.  மனிதநேயமிக்கவர்கள்
துடித்து போயிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர். பிருந்தா காரத் செய்தியறிந்து பதறியடித்துக்கொண்டு சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கே சென்று பாதிக்கப்படவர்களுக்கு ஆறுதல் கூறினார். 
        பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டிலுள்ள மூலைமுடுக்குகளிலெல்லாம் தலித் மக்களுக்கெதிராக அடுக்கடுக்கான தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருப்பதை பார்த்து நாடே கொதிப்படைந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ''தெருவில் போகிற நாய்களை சிலர் கல்லால் அடித்தால் அதற்கு அரசாங்கம்  பொறுப்பாகுமா...?'' என்று  மத்திய அமைச்சர்  வி.கே.சிங் கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் திருவாய் மலர்ந்திருக்கிறார்.  யாரை திருப்திப்படுத்த இப்படிப் பேசியிருக்கிறார்....? பிரதமரையா...? அல்லது ஆர்.எஸ்.எஸ் சியா...? இந்த துணிச்சல் எங்கிருந்து வந்தது...? இந்த சிந்தனை எப்படி வந்தது...? என்பது தான் நமது கேள்வி.
          இதே போல் தடித்த வார்த்தைகளை ஏற்கனவே நரேந்திரமோடி திருவாய் மலர்ந்திருக்கிறார் என்பதை நாம் மறந்திருக்கமுடியாது.  2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டு இறந்த சம்பவத்தை பற்றி நரேந்திரமோடி குறிப்பிடும்போது, ''காரில் அடிப்பட்டு சாகும் நாயை பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி என் மனம் இருந்தது'' என்று கொஞ்சம் கூட கூச்சநாச்சமின்றி துணிச்சலாக தன் மனநிலையை வெளிப்படுத்தினார். அதே துணிச்சல்... அதே சிந்தனை... இன்று இந்த தலித் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கிற்கும் வந்திருக்கிறது என்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. 
       இவர்கள் செக்கிற்கும், சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் என்பது தான் உண்மை...! 

கருத்துகள் இல்லை: