ஞாயிறு, 8 நவம்பர், 2015

சமையல் எரிவாயு மானியத்திற்கும் வைக்கப்போறான் ஆப்பு...!


               ''உங்களுக்கு சொந்தவீடு இருக்கா...? சொந்தமா கார் வெச்சிருக்கீங்களா...? இருசக்கர வாகனம் வேற இருக்கா...? அப்ப எதுக்குங்க  கேசுக்கான மானியம் உங்களுக்கு...? சமையல் எரிவாயுக்கான முழுத்தொகையையும் கொடுத்து வாங்கிக்கவேண்டியது தானே...? ஏழைங்க வீட்டில அடுப்பெரிய வசதிப்படைச்சவங்க கேசுக்கான மானியத்தை விட்டுக்கொடுக்கக்கூடாதா...?'' 
           இதை நான் சொல்லலீங்க...! ஓட்டுப்போட்டுப் பாத்தீங்களே... உட்காரவெச்சி பாத்தீங்களே... நம்ம பிரதமரு மோடி தாங்க இப்படி சொல்றாரு...! அவரு என்னா பண்ணுவாரு பாவம்... ரேடியோவில சொன்னாரு... தொலைக்காட்சியில சொன்னாரு... மொபைல் போன்ல சொன்னாரு... ஜீரோவ அமுக்க சொன்னாரு... நீங்க எதையாவது கேட்டீங்களா...? அவரு சொன்னப் பேச்சை கேட்டீங்களா...? இல்லையே...! 
              பாத்தாரு... இவிங்கெல்லாம் இப்படி சொன்னா கேட்கமாட்டாங்க... மயிலே... மயிலேன்னா... இறகு போடாது... வெச்சாரு ஒரு ஆப்பு...! ஓட்டு போட்டவங்க... பாடதவங்க... சாமி கும்புடுறவங்க... கும்புடாதவ்ங்க... மாட்டு மூத்திரத்தை குடிக்கிறவங்க... மாட்டிறைச்சி சாப்புடுறவங்க... யாரையும் விட்டுவைக்கல... பாரபட்சம் இல்லாம மோடி இந்திய மக்கள் எல்லாருக்கும் வெச்சாரு ஆப்பு...! இவரு சொன்ன பேச்சை  கேட்டு 42 இலட்சம் வசதிபடைச்சவங்க   எங்களுக்கு மானியம் வேணாமுன்னு சொல்லிப்பூட்டாங்களாம். எவ்வளவு சொல்லியும்  இவரு பேச்சைக்கேட்காத மிச்சமிருக்கிற வசதி படைச்சவங்களுக்கெல்லாம் அவராவே மானியத்தை புடுங்கிவிட்டுடுவாராம். 
            யாரு அந்த வசதி படைச்சவங்கன்னா...? கடனை வாங்கி வீட்டைக்கட்டி... கடனுல  வாங்கின காரை பெட்ரோல் போடமுடியாம வீட்டு வாசலில நிறுத்திவெச்சிபுட்டு... இருசக்கர வாகனத்தை ஓட்டிகிட்டு, கடனுக்கும்  சாப்பாட்டுக்கும்  அல்லாடிகிட்டு இருக்கிற அந்த வசதி படைச்சவங்ககிட்ட இருந்து தான் மோடி மானியத்தை ஒரேயடியா புடுங்கப்போறாரு.  
           குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சமையல் சிலிண்டர் வழங்கத் தேவையில்லையாம்.
                     அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மானியம் ரத்தாகுமாம். 
          அப்போது தான் அம்பானி, அதானி, டாடா, பிர்லா போன்ற நலிவடைந்தவர்களுக்கு மேலும்  உதவ முடியுமாம்.
             இப்படியெல்லாம் ஆப்பு வைக்க மோடி தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறாராம்.
            ஒரு விஷயத்தை நீங்க மறந்திருப்பீங்க...!
             இதே மாதிரியான ஒரு திட்டத்தை முந்திய காங்கிரஸ் கட்சி தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும்   முன்வைத்தது. ஆனால் அன்று இடதுசாரிக்கட்சிகள் பலத்த  எதிர்ப்பை காட்டியதால்  அந்த திட்டம் அப்போதே  கைவிடப்பட்டது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
            ஆனால் இன்றைக்கு நிலைமை வேறுமாதிரியாக இருக்கிறது. பாராளுமன்றத்தில் இடதுசாரிக்கட்சிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள சூழ்நிலையில், தனி பெரும்பான்மையுடன் ராட்சச பலத்துடன் உள்ள மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சி  அரசு இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்று  குறியாக உள்ளது.
            அதன் பிறகு மக்கள் கேஸ் சிலிண்டர் போல் வெடிப்பார்களா...? அல்லது புஸ்வானம் போல் புஸ்ஸ்ஸ்னு போயிடுவாங்களான்னு பார்ப்போம்.

கருத்துகள் இல்லை: